தமிழக எம்.பி.க்கள் குறித்து சர்ச்சை பேச்சு: எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அமைச்சர்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Published on

தமிழக எம்.பி.க்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியதுமே, தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு நடப்பதாக திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினார்.

“மத்திய அரசின் கொள்கையை ஏற்று கொள்ளாததற்காக மாநில அரசுக்கு நிதியை மறுக்கக் கூடாது. தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசை பழிவாங்கவே மத்திய அரசு நிதியை மறுக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு நடந்து வருகிறது” என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பிற பிராந்திய கட்சிகளிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறோம்.

கடந்த ஆண்டு பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் கையெழுத்துப்போட வந்த தமிழ்நாடு அரசு கடைசி நேரத்தில் யூ டர்ன் அடித்தது. இவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் நாசமாக்குகிறார்கள்.” என்றவர், தமிழ்நாட்டு எம்.பி.க்களின் நிலைப்பாடு ஜனநாயகத்தன்மையற்றது நாகரிகமற்றது என விமர்சித்தார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டம் தெரிவித்ததோடு, அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் கனிமொழி எம்.பி. கூறினார்.

இதனால், தனது வார்த்தயை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com