தமிழ்நாட்டிலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது.
உலகையே உலுக்கிய கொரோனா தொற்று அதிகரிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் மட்டும் ஏழு நாட்களில் 31 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் சில நாட்களாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் 42 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான புதுச்சேரியில் 13 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், கர்நாடகாவில் நான்கு பேருக்கும், மகாராஷ்டிராவில் ஏழு பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், வீரியம் இல்லாத கொரோனா பாதிப்பு என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மக்கள் பீதி அடைய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.