வேகமெடுக்கும் கொரோனா தொற்று... மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கொரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கொரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

“வதந்திதான் பெரிய நோய். எனவே, கொரோனா குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் பரப்பிவிடலாம். ஆனால், பதற்றத்தை ஏற்படுத்தாமல் மக்களிடையே முன்னெச்சரிக்கையை ஏற்படுத்துவது தான் அவசியம். தமிழகத்தில் தற்போது 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒமைக்ரான் வகையிலான கொரோனா பரவி வருகிறது. ஆனால், யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை. பதற்றப்பட வேண்டியதில்லை என மத்திய சுகாதார அமைப்பே தெரிவித்துள்ளது.

கொரோனா உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. நுரையீரல், இதயம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது.

புனே ஆய்வு மையத்துக்கு 17 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மக்கள் கைக்கழுவுதல், முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது. கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். முகக் கவசம் அணிவது நல்லது. ஆனால் எதுவுமே கட்டாயமில்லை. நல்லதுதான்.

கொரோனா பரவலை சமாளிக்கும் வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கட்டமைப்பு தேவையான அளவில் உள்ளது. தனி வார்டுகள் தயாராகவே உள்ளன. பதற்றப்பட வேண்டாம். வழக்கமாக நடைபெறும் ஒமைக்ரான் பரவல்தான். இந்தியா முழுக்க 1800 பேருக்கு வந்துவிட்டது. இது உலகம் முழுவதும் என்று எடுத்துக் கொண்டாலும் பதற்றப்படும் அளவில் இல்லை.

சென்னையில் கூட, கொரோனா பாதித்த ஒருவர் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் கொரோனாவால் இறந்தாரா என்றால், இல்லை. அவருக்கு ஏற்கனவே இருந்த உடல்நலப் பிரச்னையால் இறந்திருக்கிறார். மருத்துவ சிகிச்சையின்போது, ஒரு மருத்துவப் பரிசோதனை தொகுப்பு என்று இருக்கிறது. அதில் கொரோனா பரிசோதனையும் இருக்கும். அதில்தான் அவருக்கு கொரோனா இருக்கிறது என்று வந்துள்ளது. ஆனால் அவருக்கு நாள்பட்ட கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு இருந்துள்ளது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com