ஆசிய நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
சீனாவின் சிறப்பு அதிகாரம் பெற்ற ஆட்சிப்பகுதியான ஹாங்காங்கில் சுமார் 70 இலட்சம் பேர் வசிக்கின்றனர். உலகப் பெருந்தொற்றாகப் பரவிய கொரோனா கிருமி, இப்போது எண்டெமிக் எனப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாகப் பரவும் தொற்றாக மாறியுள்ளது. ஹாங்காங்கைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டுக்கும் மேல் கொரோனா பாதிப்பு தொடர்ந்துவருகிறது.
நகரின் கொரோனா கிருமிப் பரவல் மிக அதிகமாகக் காணப்படுகிறது என்கிறார், ஹாங்காங்கின் நோய்ப்பரவல் தடுப்பு மருத்துவப் பிரிவின் தலைமை அதிகாரி ஆல்பர்ட். ஓராண்டுக்கு முன்னர் இருந்த நிலைமையைவிட இப்போது பாதிப்பு அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாதபடி 31ஆகப் பதிவாகியுள்ளது.
கழிவுகள் மூலமாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கிறார்கள், ஹாங்காங் சுகாதாரத் துறையினர்.
உலகின் நிதியியல் தலைநகரான சிங்கப்பூரில் வாரத்துக்குவாரம் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் முந்தைய வாரத்தைவிட 28 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி இருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் 14,200 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் என்கிறது அந்நாட்டு சுகாதாரத் துறை.
தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்பவர்கள் 30 சதவீதம் அளவுக்கு பெருகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.