தனியார் மருந்தகங்கள் திறப்பு- கம்யூ. கட்சிகள் வரவேற்பு!

தனியார் மருந்தகங்கள் திறப்பு- கம்யூ. கட்சிகள் வரவேற்பு!
Published on

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் தொடங்கப்பட்ட ஆயிரம் கூட்டுறவு, தனியார் மருந்தகங்களுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தின் அறிக்கை:

“தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார். பிற மருந்தகங்களை ஒப்பிடும்போது முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75 சதவிகிதம் வரை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவச் செலவிற்கான சுமை பெரிய அளவில் குறையும். அத்தோடு பி.பார்ம், டி.பார்ம் படித்துள்ள மாணவர்களும், தொழில்முனைவோர்களும் இந்த திட்டத்தில் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இம்மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பதை படிப்படியாக தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு பாராட்டுதல்களை  தெரிவித்துக் கொள்கிறது.”

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

”தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் அறிவித்தபடி, மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்க, இன்று (24.02.2025) தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக 2021 ஆம் ஆண்டு முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திறக்கப்படும் முதல்வர் மருந்தகங்கள் மக்களின் மருத்துவச் செலவுகளை பகிர்ந்து கொள்ளும் போது, நோயாளிகள், அவர்களது நோய் தீரும்வரை மருந்து எடுத்துக்கொள்வதை இடைநிறுத்தம் இல்லாமல் பரிபூரண குணமடையும்வரை மருந்துகள் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யும்.

முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கையை மேலும் கூடுதலாக்கவும், உயிர் காக்கும் முக்கியத்துவம் கொண்ட, அரிதான மருந்துகளும் முதல்வர் மருந்தகங்களில் கிடைக்கவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு நன்றி பாராட்டி வரவேற்கிறது.” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com