ஐந்து மாநிலங்களுக்கு 1,500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட புயல் நிவாரண நிதி தந்துவிட்டு, கடுமையான நிதி நெருக்கடியில் இருந்துவரும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாயும் நிவாரண நிதி வழங்காமல் புறக்கணித்துவரும் ஒன்றிய அரசு, வரலாறுகாணாத பேரழிவை வயநாடு பகுதியில் சந்தித்த கேரள அரசுக்கும் நிவாரண நிதி ஒரு ரூபாயும் வழங்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தை பெஞ்சல் புயல் தாக்கியது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் 69 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து, 1.50 கோடி தொழிலாளர்களும், பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த பெஞ்சல் புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, கட்டுமானங்களை மறு சீரமைக்க ரூபாய் இரண்டாயிரத்து 475 கோடி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டு, உடனடியாக ரூ 2 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க உதவ வேண்டும் என ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் கடிதம் மூலமாகவும், நேரிலும் தொடர்ந்து முறையிடப்பட்டது.
இதற்கு முன்னர் 2023 ஆம் மிக் ஜாம் புயல், பெரு மழையால் ஏற்பட்ட இழப்புகளையும், சேதாரங்களையும் சீரமைக்க ரூ.37 ஆயிரம் கோடி, பேரிடர் நிவாரண நிதி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் முறையிட்டிருந்தது. ஆனால், ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்காமல் முற்றிலுமாக கை கழுவி விட்டது.
இந்த நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து, அவர்களது வங்கிக் கணக்கில் நிவாரண நிதியை சேர்க்கும் பணியில் தாமாக முன்வந்து ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் ஐந்து இலட்சத்து 18 ஆயிரத்து 800 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
நிலைகுலைந்து நிற்கும் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள நிவாரண நிதி வழங்கும் தமிழ்நாடு அரசுக்குப் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
இதற்கிடையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம், ஐந்து மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,555 கோடி ஒதுக்கீடு செய்து, அது தொடர்பான விபரங்களை அறிவித்துள்ளது.
இதில் ஆந்திரா, ஒடிஷா, திரிபுரா, நாகாலாந்து, தெலுங்கானா மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்துவரும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாயும் நிவாரண நிதி வழங்காமல் தமிழ்நாட்டைப் புறக்கணித்து வரும் ஒன்றிய அரசு, வரலாறு காணாத பேரழிவை வயநாடு பகுதியில் சந்தித்த கேரள அரசுக்கு நிவாரண நிதி ஒரு ரூபாயும் வழங்கவில்லை.
ஒன்றிய அரசின் இந்த வஞ்சகச் செயலை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் கோரியுள்ள நிவாரண நிதியை வழங்கி உதவவேண்டும்.” என்று முத்தரசன் கூறியுள்ளார்.