மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று தொடங்கியது.
இதையொட்டி கோலாகலமான பொது நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
மதுரையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்றுமுதல் வரும் ஆறாம் தேதிவரை சிபிஎம் கட்சியின் 24 ஆவது அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் தலைவர்களும் வரத் தொடங்கினர்.
மூத்த தலைவர்களான திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் மாநாட்டுக்கு முன்னதாகவே வந்துசேர்ந்தனர்.
கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத்தும் ஒரு நாள் முன்னதாகவே மதுரைக்கு வந்து மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டார்.
இந்த மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை இந்து பத்திரிகைக் குழும உரிமையாளர்களில் ஒருவரான என்.இராம் திறந்துவைத்தார்.
இன்று பொது மாநாடு மாநாடும் தொடக்க விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெறும் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காலை வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளாகக் கலந்துகொண்டனர்.
முதல் நாள் கூட்டத்தில் இடதுசாரி கூட்டணியின் தலைவர்கள் சி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் டி.இராஜா, சி.பி.ஐ.எம்.எல். கட்சியின் பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா ஆகியோருடன் பிரகாஷ் காரத்தும் நாட்டில் நிலவிவரும் அரசியல் சூழலைப் பற்றி தங்களுடைய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்தனர்.
பின்னர் பிற்பகல் தொடங்கிய கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் மாலைவரை தொடர்ந்தது.
இந்த மாநாட்டையொட்டி தினந்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திரைத் துறையினர் பங்கேற்கின்றனர். இன்று திரைப்பட இயக்குநர்கள் சசிகுமார், இராஜுமுருகன் ஆகியோர் பேசினர்.