சனாதன தர்மம் குறித்த விமர்சனம்: உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிய உச்சநீதிமன்றம் தடை!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி
Published on

சனாதன தர்மத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்குகள் பதியக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து கடுமையான விமர்சங்களை முன்வைத்திருந்தார்.

அதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிஹார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டன.

இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை என்றால் கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்காவது மாற்ற வேண்டும். உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளைவிட பாஜக நிர்வாகி நுபுர்சர்மா, அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் அதிகளவில் சர்சசைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.

அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன. தமிழகத்தின் துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலினை இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக வழக்குகள் பதியப்படுகிறது. எனவே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிதாக வழக்குகள் பதிய தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.

அப்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘சனாதன தர்மம் குறித்து தமிழகத்தின் துணை முதல்வராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பற்ற முறையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் பேசியுள்ளார். குறிப்பி்ட்ட ஒரு சமூகத்தை டெங்கு, மலேரியா கொசுக்களை அழிப்பதுபோல அழிக்க வேண்டும் என்றும், சனாதனத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் எனவும் வெறுப்பு பேச்சு பேசியுள்ளார், நாங்கள் தமிழகத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரானவர்கள்” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘நாங்கள் இந்த விஷயத்தில் தற்போது எந்த கருத்தையும் கூறவிரும்பவில்லை. இந்த வழக்கில் அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். அதேநேரம் சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக எந்த வழக்கும் பதியக்கூடாது”என தடை விதித்து விசாரணையை ஏப்ரல் 21-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com