பி.எச்.டி. முடித்த தூய்மை பணியாளர் மகள் – திருமாவுக்கு சண்முகத்தின் பதில்!

பெ. சண்முகம் - திருமாவளன்
பெ. சண்முகம் - திருமாவளன்
Published on

''தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் கருத்து குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் சட்டம். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

தூய்மை பணியாளர்கள் மட்டுமல்ல, பல துறையில் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் போக்கு இருக்கிறது.

தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களும் சட்டபூர்வமாக வைத்திருக்கும் கோரிக்கை பணி நிரந்தரம் என்பது. திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல. ஏனென்றால் எனக்கு தெரிந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், அவர்கள் அப்பா, அம்மா நிரந்தர பணியாளர்களாக இருந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தில் பிஎச்டி முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தார்கள். தற்போது அந்த பெண் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். எனக்கு தெரிந்த குடும்பத்தை பற்றி சொல்கிறேன்.

ஒரு வேளை பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தால், நான் இன்றைக்கு சொல்லும் பேராசிரியராக இருக்கும் அந்த பெண்ணும் தூய்மை பணியாளாராக தான் இருந்திருப்பார். ஆகவே பணி நிரந்தரம் அதில் கிடைக்கும் வருமானம், பணி பாதுகாப்பு ஆகிய சேர்ந்து அடுத்த தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து உயர்கல்வி பெறுவதற்கும், வேறு வாய்ப்பு கிடைப்பதையும் அந்த குடும்பத்திற்கு ஏற்படுத்துகிறது.

ஆகவே இந்த பிரச்னையை திருமாவளவன் மட்டுமல்ல அதியமான் உட்பட இத்தகைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். இது வந்து கொஞ்சம் கூட ஏற்கத்தக்கதல்ல. நாம் வந்து பரம்பரையாக அந்த குடும்பத்தில் இருக்கும் பணியை வழங்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை.

இப்பொழுது பணி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது. ஆகவே திருமாவளவன், அதியமான் ஆகியோர் கூறும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com