கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு: முதல்வர் நேரில் ஆறுதல்!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு: முதல்வர் நேரில் ஆறுதல்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில், கடந்த 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்தவர்கள் அனைவரும் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஆறு பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த சிலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனிடையே, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயன் என்பர் இன்று உயிரிழந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பேருக்கரணை கிராமத்தில் கலப்பட மது அருந்திய ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.  இதுதொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மது விலக்குப் பிரிவு ஆய்வாளர் ஆகிய மூன்று பேரும் மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல் ஐஜி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராய வேட்டையை தீவிரப் படுத்துமாறு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com