நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பிவருகின்றன. குறிப்பாக, 267ஆவது பிரிவின் கீழ் விவாதம் நடத்தவேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருந்துவருகிறது. மாநிலங்களவையில் இதுகுறித்து அவைத்தலைவர் ஜெகதீப் தாங்கருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரைனுக்கும் இடையே கடந்த வாரம் கடுமையாக வாக்குவாதம் ஆனது.
குறிப்பாக, பிரைன் நாடகமாடுவதாக தாங்கர் குறிப்பிட்டது, பிரச்னையை மேலும் அதிகப்படுத்தியது.
இன்றும் பிரைன் தொடர்ந்து மணிப்பூர் பிரச்னையை எழுப்பினார். கவன ஈர்ப்பாக அவர் எழுப்பிய பிரச்னையால், தாங்கர் கோபம் அடைந்தார். அவர் அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக தாங்கர் கோபமாகக் குறிப்பிட்டார்.
அதையடுத்து, அமைச்சர் பியூஷ் கோயல் பிரைனை அவையிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை ஏற்றுக்கொண்ட தாங்கர், நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரைனை அவை நடவடிக்கைகளில் பங்குபெற விடாதபடி இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் ஏற்பட்ட கூச்சலால் மதியம் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.