இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
Published on

மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

தென்மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு இரண்டு படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் பரமக்குடியைச் சேர்ந்தவர். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவ இவர், வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்திலும் நடித்தார்.

ஆடுகளம் படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் எழுதினார். கதிர், ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமான ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கினார். இதில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார். அடுத்து ஏறுதழுவலை மையமாக கொண்ட ‘தேரும் போரும்’ என்ற படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி வந்தார்.

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார். மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பஸ் ஏறும் போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு காலமானார். சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள விக்ரம் சுகுமாரனின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு திரையுலகினரும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com