‘திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா பேசியது சமூக ஊடகத்தில் வைலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திமுக மாணவர் அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று உதகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா, “கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி, எவன் திமுககாரன் என்ற வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன் திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க.”என்றார்.
ஆ. ராசாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''அது ராசாவின் தனிப்பட்ட கருத்து. தலைவர் அதுபோன்று எதுவும் கூறவில்லை'' என்றார் அமைச்சர் சேகர்பாபு.