இளம் பேச்சாளர்களைக் களமிறக்கும் தி.மு.க.- தொகுதிவாரியாகக் கூட்டங்கள்!

இளம் பேச்சாளர்களைக் களமிறக்கும் தி.மு.க.- தொகுதிவாரியாகக் கூட்டங்கள்!
Published on

தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் போட்டி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்களைக் கொண்டு சட்டமன்றத் தொகுதிவாரியாகக் கூட்டங்கள் நடத்த அக்கட்சி புதிய முடிவை எடுத்துள்ளது. 

தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் 100 இளம் பேச்சாளர்களை உருவாக்க கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டார். அதன்படி, மாநிலம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. ஆதரவு ஊடக எழுத்தாளர்கள், ஊடகப் பேச்சாளர்கள், யூட்டியூப் பிரபலங்கள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

மொத்தம் விண்ணப்பித்த 17 ஆயிரம் பேரில் 182 பேரைத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் மண்டல அளவிலும் பலர் தேர்வுசெய்யப்பட்டு மொத்தம் 200 இளம் பேச்சாளர்கள் கடைசிச் சுற்றில் கொண்டுவரப்பட்டனர்.

அவர்களுக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் பயிற்சியும் வழங்கப்பட்டது. தி.மு.க. ஆதரவு ஊடகப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

அதில் தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதியும் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில், அந்த 200 இளம் பேச்சாளர்களையும் சட்டமன்றத் தொகுதிவாரியாகக் கூட்டங்களில் களமிறக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகொண்டான் தலைமுறை, மதிமாறன் தலைமுறைக்கு, அடுத்ததாக புதிய தலைமுறை இளம் பேச்சாளர்களைப் புகுத்தி வாக்காளர்களைக் கவர்வதில் தி.மு.க. மும்முரமாகியுள்ளது.

சுமார் 30 சதவீதம் பேர் இளம் வாக்காளர்கள் எனும் நிலையில், அவர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு புது வகை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க.வும் தன் பங்குக்கு இளம் வாக்காளர்களைக் கவர தன்னுடைய மரபான மேடைப் பேச்சைப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் ஒரு பக்கம் தனி நிறுவனம் மூலமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தாலும், நேரடிப் பேச்சுக்கும் அக்கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது.

இவர்களுக்கான பயிற்சியைத் தொடங்கிவைத்த உதயநிதி, சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போடுவதைவிட ஆட்சியையும் கட்சியையும் முதலமைச்சரையும் பற்றிப் பேசி பதிவிடுமாறு அழுத்தமாகக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com