பெங்களூரில் ரூ.50 கோடிக்கு வெளிநாட்டு நாய் வாங்கிய ஒருவரின் வீட்டுக்கு ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காகப் பலரும் பலவித முயற்சிகளை செய்து வருகின்றனர். சிலர் அதன் மூலம் பெரிய அளவில் பொருளீட்டி சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். சிலர் சினிமாவில் முகம் காட்டவும் தொடங்கி உள்ளனர்.
அந்த வரிசையில் பெங்களூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கியிருப்பதாகவும், அது ஓநாய்க்கும், காக்கேஷியன் ஷெப்பர்ட் நாய்க்கும் பிறந்தது என்று கூறி இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் அப்பதிவில் உலகிலேயே மிகவும் விலைமதிப்புள்ள செல்லப்பிராணிக்கு சொந்தக்காரர் என்றும் தன்னைக் கூறிக் கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த ‘ரூ.50 கோடி நாய்’ என்கிற பதிவு சமூக ஊடகங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. இதன் மூலம் அவர் எதிர்பார்த்த பிரபலமும் கிடைத்தது.
இந்த நிலையில் ‘ரூ.50 கோடி நாய்’ பதிவைக் கேள்விப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, இதில் அந்நியச் செலாவணி விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சதீஸ் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நாய் அவருக்கு சொந்தமானது இல்லை என்றும், பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வந்த நாயைப் படம்பிடித்து சமூக ஊடகத்தில் பிரபலமாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கும் அளவுக்கு வசதியானவர் இல்லை என்பதும் புகைப்படத்தில் இருந்த நாயின் மதிப்பும் ரூ.1 லட்சம் கூட இல்லை என்றும் தெரியவந்தது. சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்திருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, அமலாக்கத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.