செய்தியாளர் சந்திப்பில் சீமான்
செய்தியாளர் சந்திப்பில் சீமான்

விஜயலட்சுமி விவகாரம் - சரமாரி கேள்விகள்; சீமான் சொன்ன பதில்கள்!

நடிகை விஜய லட்சுமி குற்றச்சாட்டு தொடர்பாக இனி கேள்வி கேட்காதீர்கள் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கடந்த இரண்டு நாட்களாக விஜயலட்சுமி உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான்,”குற்றச்சாட்டுகள் உண்மை இல்லையெனில், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த குற்றச்சாட்டை நம்பியிருந்தால் என்னை சுற்றி இவ்வளவு பேர் இருப்பார்களா இது ஏன் தேர்தல் நேரத்தில் பேசப்படுகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “தயவு செய்து சமூகத்திற்குத் தேவையான கேள்விகளைக் கேளுங்கள். 11 வருசமாகவா ஒரே குற்றச்சாட்டு. நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என்னை ஒரு பெண் ஏமாற்றிவிட்டு, வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறது. நான் போய் சமூகத்திடமும் செய்தியாளர்களிடமும், என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டுப் போய்விட்டது என சொல்லிக் கொண்டிருந்தால் காறித் துப்ப மாட்டீர்கள்? அதை ஊடகத்தினர் ஏன் எல்லாரும் ரசிக்கிறீர்கள்?” என்றும் ஆவேசப்பட்டார்.

”எனக்கு குடும்பம் இருக்கிறது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். என்ச்னை சுற்றி லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப ஏன் இதையே பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. இனிமேல் இதை விட்டுவிடுங்கள். அவசியமான கேள்விகளைக் கேளுங்கள். அவசியமற்ற கேள்வியைத் தவிருங்கள்.” என்றவரிடம், விஜயலட்சுமியிடம் காவல்துறை விசாரணை நடத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீமான், “யார் புகார் கொடுத்தாலும் காவல் துறை விசாரணை நடத்தும். உண்மையில் நான் குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று தானே சொல்கிறேன். குற்றச்சாட்டுகளைக் கண்டு நான் அஞ்சவில்லை; எங்கும் ஓடி ஒளியவில்லை.” என்றார்.

அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என விஜயலட்சுமி கூறியது தொடர்பான கேள்விக்கு, “திமுக ஆட்சியில் எடுங்களேன். என்ன எடுக்கிறீங்கனு பாக்குறேன்.” என்றார் சீமான்.

நேற்று விஜயலட்சுமியின் காவல் துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தி ஆடியோ ஆதாரங்கள், வங்கி பரிவர்த்தனை விபரம் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். இன்று விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு நிறுத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com