அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

500 கோடி கொடுத்தாலும் வேண்டாம்! – அனல் பறக்க பேசிய அன்புமணி!

கடலூரில் என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், ‘இரண்டு நாட்களாக எனக்கு தூக்கம் இல்லை. இன்று விடியற்காலையிலேயே எழுந்துவிட்டேன். சென்னையிலிருந்து கொண்டு இந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழுந்தது. அதனால் தான் இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்துக்கு செல்லவில்லை. மத்திய மாநில அரசுகள் நிலத்தை எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மண்ணை அழிக்கின்ற என்.எல்.சி நிர்வாகமே இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த மண்ணைக் காப்பதற்காக கடந்த ஒரு வருடத்தில் நிறையப் போராட்டங்களை பா.ம.க. முன்னெடுத்துள்ளது.

சில கட்சிகள் சொல்கின்றன, என்.எல்.சி.க்காக நிலத்தை கொஞ்சம் கூட்டிக் கொடுங்கள் என்று. அதேபோல், 25 லட்சத்திலிருந்து 30 லட்சம் கொடுத்தால் போதும் என ஒருவர் சொல்கிறார். இன்னொருவர், ரூ.1 கோடி கொடுத்தால் போதும் என்கிறார். நீங்கள் 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். நீங்கள் வெளியேறுங்கள்!

இது தமிழ்நாட்டின் பிரச்னை. கதிர் வரும் நெல்லை நாசப்படுத்தினார்கள் நேற்று. படுபாவிகளே நீங்களே நல்லாருப்பீங்களா? இதை நாங்கள் விடமாட்டோம். இது மருத்துவர் ஐய்யாவின் உத்தரவு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய கோரிக்கை வேறு. இன்று வேற.

300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் போடப்பட்டது. விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி, அடக்கமுறையை ஏவிவிட்டு பொக்லேன் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர்.

இன்னைக்கு நான் வரேன் என்பதால் வேலையை நிறுத்தியுள்ளனர். அது போதாது. நாளைக்கு மீண்டும் வேலையை தொடங்கினால், இந்த மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற வேண்டும். இனி அங்கு யாரும் போகக் கூடாது.

1956-இல் என்.எல்.சி நிறுவனம் இங்கு வருவதற்கு முன் வெறும் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. உலகிலேயே தன்னூற்றாக இரண்டு இடங்களில் மட்டுமே நீர் கிடைத்தது. ஒன்று ஆஸ்திரேலியா மற்றொன்று நெய்வேலி. தற்போது நெய்வேலியில் சுமார் 1000 அடியில் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. அதற்கு காரணமே என்.எல்.சி. தான். தன்னுடைய சுயநலத்திற்காகக் கோடிக்கணக்கான நீரை ராட்சத மோட்டார் வைத்து உறிந்து கடலுக்கு அனுப்பியது என்.எல்.சி தான். இதுவா வளர்ச்சி? நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை வேலை இல்லை. இதுவா வளர்ச்சி? என பேசி முடித்தார்.

இதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி-யை முற்றுகையிட சென்றபோது, அவரை கைது செய்து காவல் துறையினர் வாகனத்தில் ஏற்றினர். இதனால் கோபமடைந்த பாமகவினர் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல் துறையினர் தடியடி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com