‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது’ என கமல் கூறியிருந்த நிலையில், அதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருசேர எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார். அதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திர எடியூரப்பாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னடம் உலகில் மிகவும் மதிக்கப்படும் மொழி என்பதை கமல்ஹாசன் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட, மதவெறிபிடித்த நபர்கள் குறைந்தபட்சம் புரிந்துகொள்ள வேண்டும். கன்னட படங்களிலும் நடித்த கமல்ஹாசன், கன்னட மக்களின் தாராள மனப்பான்மையை மறந்துவிட்டு, தனது நன்றியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்துவதன் மூலம் கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்.” என கேட்டுக் கொண்டுள்ளார்.
“கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது தெரியாமல் கமல்ஹாசன். பேசுகிறார்.” என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், தக் லைஃப் திரைப்படத்துக்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு இருக்கும் கூறப்படுகிறது.