முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வுக்காக சுமார் 11.37 கோடி ரூபாய்( 10 லட்சம் பவுண்ட்) உதவித்தொகை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருகனான சபரீசன், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சுமார் 11.37 கோடி செலவில் திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் முனைவர் பட்ட உதவித்தொகையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இத்தகவலை உறுதிப்படுத்தி ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு சபரீசன் அளித்த பேட்டியில் "திராவிட இயக்கத்தை உலகளவில் கொண்டு செல்வதற்கு இதுவே சரியான தருணம். சமூக நீதி இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேலானது. இதேவேளையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம். இந்த முனைவர் பட்ட உதவித்தொகை, இந்தியா உட்பட உலகளவிலான மாணவர்களை இலக்காகக் கொண்டது," என்றார்.
இந்த உதவித்தொகை தொடர்பான முறையான அறிவிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னர், இரண்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் எழுத்துகளைப் பிரதிபலிக்கும் திராவிட இயக்கத்தின் சித்தாந்தம், வரலாறு, அரசியல் மற்றும் இலக்கியம் தொடர்பான 200 புத்தகங்களை சபரீசன் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திராவிட இயக்க ஆர்வலர்கள் பெருமைப்படும் செய்தி இது. அவரது PEN அமைப்பு மூலம் இது தொடர்ந்து வழிநடத்தப் படுமாம்!