அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர், தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் நடப்பு கல்வியாண்டில் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காலநிலைமாற்ற உச்சி மாநாட்டில் இதே பெயரிலான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலைமாற்றத் துறை சார்பில் 2 நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலைமாற்ற 3ஆவது உச்சி மாநாட்டில் அவர் பேசியதாவது:

“இந்தியாவிலேயே முதல் முறையாக காலநிலைமாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். காலநிலைமாற்றத்தை கல்வித் துறை மூலம் புகட்ட திராவிட மாடல் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்கால கனவுகளுக்கு கல்விதான் அடித்தளமாக விளங்குகிறது. அதனால்தான் காலநிலை கல்வி அறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க முடிவெடுத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தொகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்ற தடுப்புக்கான திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வேளாண், நீர்வளத்துறைக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

காலநிலை மாற்றம்தான் இன்று உலகநாடுகளும், மானுட சமுதாயமும் எதிர்கொண்டிருக்கிற மிகப்பெரிய சவால். மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அரசால் மேற்கொள்ளப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியே இந்த மாநாடு.

உலகை அச்சுறுத்தும் பெருவெள்ளம், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்; வயநாடு நிலச்சரிவு, திருவண்ணாமலை மண்சரிவுக்கும் காலநிலை மாற்றத்தையே காரணமாக சொல்ல வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com