எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் அருண்ராஜ் இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இந்த அழைப்பு தவெகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், தங்களின் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், இதுவரை யாரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி குழப்பமான மனநிலையில் உள்ளதாகவும், தங்களுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தன்னை பெரும் தலைவர், நல்ல கூட்டணியை உருவாக்கிவிடுவேன் என்பதைப் போல கட்டமைக்க இது போல் தவறான கருத்தை கூறி வருகிறார் என்றும் அதிமுக - பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதாலேயே பிரமாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வர உள்ளது என்று கூறுவதாகவும் அருண்ராஜ் தெரிவித்தார்.
மேலும் தவெக கூட்டணியில் யாரை சேர்ப்பது, தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அந்தக் கூட்டணி முடிவுகளும் டிசம்பருக்கு பிறகுதான் எடுப்போம் என்றார்.
அதேபோல், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நாதக தலைவர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போதுவரை நாதகவில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இரண்டு மாதத்துக்குள் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
எங்கள் கொள்கை என்பது தனித்து அரசியல்தான். ஏற்கெனவே அதிமுக – திமுக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. எனவே நாங்கள் தனித்து அரசியல் நோக்கித்தான் முன்னெடுப்போம். எத்தனை காலம் ஆனாலும் எங்களின் தனித்து அரசியல் என்பது மாறாது” என்றார்.