ஈ சால கப் நம்தே! ஓடிவந்து கட்டித் தழுவிய டிவில்லியர்ஸ்!

கோப்பையுடன் விரட் கோலி
கோப்பையுடன் விரட் கோலி
Published on

18 ஆண்டுகள் காத்திருப்பு. அதன்பின் ஒரு கனவு நிறைவேறல். எப்போதும் பெரும் காத்திருப்பின் பின் நிகழும் கனவுகள் இனிப்பானவை. ஆர்சிபி அணி ரசிகர்கள் இந்த இனிப்பின் ருசியை இன்னும் நம்பமுடியாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை கடைசியில் வென்றேவிட்டது!

இத்தனை ஆண்டுகளாக அத்தனை தோல்விகளிலும் ஆர்சிபி -ஐ விடாமல் ஆதரித்து வந்த ரசிகர்கள் தங்கள் கனவு நிறைவேறிய ஆனந்த் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மைதான். ஐபிஎல் அணிகளில் மிக அதிகமான ரசிகர்களை கொண்டது ஆர்சிபி அணி தான்.  அது மட்டுமல்ல, கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்டார்களான கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கிரிஸ் கெயில் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் சாதனைகளை நிகழ்த்திய அணி. கோப்பை கனவு மூன்று முறை இறுதி கட்டத்தில் கைநழுவி போய் துயரத்தையே ருசித்த அணி அது. அத்துடன் கிங் கோலி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் சில ஆண்டுகளே  கைவசம் இருக்கும் காலகட்டத்தில் இருக்கிறார். அவருக்காகவாவது இந்த கோப்பையை கைப்பற்றி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் இந்த ஆண்டு தெரிந்தன. தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றிருந்தாலும் அந்த அணியின் ஆலோசகராக ஓடி ஆடி திறமையான வீரர்களை ஏலத்தில் எடுத்தார். அணி நிர்வாகம் தன் முழு வேகத் தயாரிப்பில்  இருந்தது. கோப்பை கை நழுவி போய்க்கொண்டிருப்பது அவர்களின் கவுரவ பிரச்சனையாக மாறிப் போயிருந்தது.

கிரிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ்,  கோலி
கிரிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், கோலி

இறுதிப் போட்டு நடந்த அகமதாபாத்தில் கடந்த எட்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி நல்ல ஸ்கோர்களை எடுத்து இருந்தது. ஆனால் இந்த பிட்ச் வித்தியாசமாக இருந்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோலி எடுத்தது 43 மட்டுமே. இதுதான் அங்கு முதலில் ஆடிய அணி எடுத்த மிக குறைந்த ஸ்கோர். இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பை அணியை, பஞ்சாப் கிங்ஸ் அதன் 204 என்ற ஸ்கோரை ஒரு ஓவருக்கு முன்பே தட்டி தூக்கி இருந்தது. எனவே ஆர்சிபி  ரசிகர்கள் சற்று கலக்கத்துடன் தான் இருந்தார்கள். இந்த சீசன் முழுக்க தன் திறமையான தலைமைத்துவத்தால் கவனிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மும்பைக்கு எதிராக அவர் அடித்திருந்த 87 ரன்கள், இந்த ஐபிஎல் சீசனின் மிகச் சிறந்த ஆட்டமாக இருந்தது. ஆனால் ஒரே ரன் எடுத்த நிலையில் சற்றும் எதிர் பாராமல் ரோமாரியா ஷெப்பர்ட் பந்துவீச்சில் அவர் அவுட்டாகி திரும்பிவிட்டார். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை  நீளமானது. ஜாஸ் இங்கிலீஷ் அடித்து நொறுக்கி இலக்கை நோக்கி முன்னேறிய  பொழுது, குர்னால் பாண்டியாவின் பந்து வீச்சுக்கு அவுட் ஆகி போனார். அதன் பின்னர் சஷாங்க் சிங்கின் துல்லியமான மட்டை வீச்சு பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. சஷாங்க் சிங் வரலாற்றில் தன்னுடைய பெயரை பொறிக்கக்கூடிய வாய்ப்போடு ஆடினார். அதற்கான திறமையும் வாய்ந்தவர் தான் அவர். மிகவும் மெதுவாக பந்து எழுந்து வந்த இந்த மைதானத்தில் அவரது ஆட்டம் மிக பிரமாதமாக இருந்தது. பேட்ஸ்மேன் எல்லாம் அவுட் ஆகிவிட பவுலர்களை மட்டும் வைத்துக் கொண்டு கடைசி இரண்டு ஓவர்களை அவர் எதிர்கொண்டார். கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுக்க வேண்டும். இமாலய இலக்கு.  இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சாளரான ஹேசல்வுட் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை. மீதி பந்துகளை பவுண்டரிகளுக்கும் சிக்ஸ்களுக்குமாக(6,4,6,6) விரட்டி தள்ளி 184 என்ற இலக்கையே எட்ட முடிந்தது. கூடுதலாக ஒரே ஒரு ஆறு அடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும்.

இதுவரை கோப்பையே வெல்லாத அணிதான். ஆனாலும் அவர்களுக்கு வெற்றி கனி வாய்க்கவில்லை.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்

இளம் வீரர்களைக் கொண்டு  மிக மிக அருகில் வந்ததன் மூலம் இறுதி போட்டிக்கு தாங்களும் தகுதியானவர்களே என்பதை அவர்கள் நிரூபித்தார்கள். குர்னால் பாண்டியாவும் புவனேஷ்வர் குமாரும் யஷ் தயாளும் சிறப்பாக பந்து வீசினார்கள். இவர்கள் மூவருமே முந்தைய காலங்களில் கோப்பையை வென்ற அணிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள்.

ஆண்டுதோறும் ஈ சாலா கப் நம்தே என்று கோஷமாகவே கனவு கண்டுகொண்டிருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு இம்முறை அது பலித்திருக்கிறது. அடுத்த சீசன் தொடங்கும் வரை இந்த கொண்டாட்டங்கள் ஓயப்போவது இல்லை!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com