தமிழ்நாட்டை அதிமுக ஆண்டாலும் திமுக ஆண்டாலும் சாதிய வன்கொடுமைகள் தொடர்வதாக மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“தமிழ்நாட்டில் அதிமுக ஆண்டாலும் திமுக ஆண்டாலும் சாதிய வன்கொடுமைகள் பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 1989ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடு முழுக்க நிலைநாட்டப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டன. இருந்தாலும் அந்த வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல், புலனாய்வு செய்யப்படாமல் பல வழக்குகள் நீர்த்துப்போனது. இதைத்தொடர்ந்து,2015 ஆம் ஆண்டு அந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேலும் வலுவூட்டி, சாட்சிகளுக்கான பாதுகாப்பு உரிமைகளை கொடுத்து, திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிற வன்முறை வெறியாட்டங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. இந்தியா முழுக்க பேசப்படக்கூடிய கட்சியாக திமுக மாறி இருக்கிறது.
திமுக சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கிறது என்பது உண்மை. ஆனால், தமிழகத்திலே சாதிய ஆணவப் படுகொலைகள், வன்கொடுமைகள் பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தீவட்டிப்பட்டி தொடங்கி மேல்பாதி வரையிலும், நாங்குநேரி சின்னதுரை தொடங்கி தூத்துக்குடியில் கபடிப்போட்டியில் வென்று கப்பு வாங்கியதற்காக தலித் மாணவனை வெட்டி சாய்த்தது வரை வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு யார் காரணம்? தமிழக அரசு, காவல்துறை மீது மட்டும் பழி போட்டுவிட்டுத் தப்பிக்க முடியுமா? தமிழக முதல்வர்தானே காவல்துறைக்கு பொறுப்பு.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான தனி ஆணையம் கண்டிருக்கிறோம் என்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் மனித உரிமை சார்ந்திருக்கிற தலைவர்களையும் பொறுப்பில் நியமித்தாலும் கூட, நடைமுறையில் அந்த ஆணையமாகட்டும், மாநில முதல்வரை கொண்டிருக்கிற குழுவாகட்டும், மாவட்டத்தில் இருக்கக்கூடிய விழிப்புணர்வு குழுவாகட்டும் அல்லது கோட்டாட்சியரின் தலைமை இருக்கக்கூடிய குழுவாகட்டும் எதுவுமே நடைமுறையில் இதுபோன்ற வன்கொடுமை வழக்குகளை முன்கூட்டி ஆய்ந்து தடுப்பது இல்லை. அவர்கள் கடமையை செய்ய தவறி இருக்கிறார்கள். எங்கெல்லாம் வன்கொடுமை வழக்கு வருமோ, அந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கே சுமுக நிலையைக் கொண்டுவர வேண்டும். ஆனால், கல்வி தொடங்கி, விளையாட்டுத் துறை தொடங்கி அவர்கள் படிப்பதிலும் வேலைவாய்ப்புக்குச் செல்வதிலும் ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியர்கள் மாவட்ட ஆட்சியிலிருக்கும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உண்டு. இதனை முறையாக ஒவ்வொரு கட்டத்திலும் அரசு ஆய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. குறிப்பாக தமிழகம் முதல்வருக்கு உண்டு. ஆகவே தமிழக அரசை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம், உங்களுடைய அமைப்புகள், களத்துக்குச் சென்று, காரணங்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.