'ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய்… காங்கிரஸ், விசிகவுக்கு என்ன திடீர் பாசம்?'

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Published on

ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். அவர் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அன்புமணி தலைமையில் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

“திமுகதான் பாமகவுக்கு எதிரி. ராமதாஸ் மீது திருமாவளவன், வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. செல்வபெருந்தகைக்கு தற்போதைய திடீர் பாசம் எதனால் ஏற்பட்டது. திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன். இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி.

பாமக ராமதாஸ் உருவாக்கியதுதான். ஆனால், வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தைபோல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுய லாபத்துக்காக, அவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அது தெரிந்த பிறகுதான் நான் தலைவரானேன். அவரை யாரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யக் கூடாது.

அவர் சொல்லித் தான் பாஜகவுடன் 2024இல் கூட்டணி பேசினேன். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது, அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன். அவர் சரி என்று சொன்னதால் தான் பாஜகவினர் தைலாபுரம் வந்தனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. ஆனால், தற்போது அவர் இல்லை என்று மறுக்கிறார்.

ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. கட்சியில் முழு அதிகாரம் எனக்கு தான். 99 சதவீத கட்சியினரும் நம்மிடம்தான் உள்ளனர். கொள்ளை அடிப்பவருக்கும், கொலை செய்பவருக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். ஆனால் அது அவரின் சிந்தனையில் நடைபெறுவது அல்ல. கட்சி சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரமிக்கவர் நிறுவனர் என்று சட்டவிதி கிடையாது. கட்சியின் பொதுக்குழுவை நடத்துவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய். பெற்ற மகனையும் வீட்டுக்கு வந்த மருமகளையும் பொது வெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா. எனது மனைவி பாரம்பரியம்மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். ராமதாஸ் முன்பு போல் இல்லை. நான் பேசாமல் இருப்பதால், அவர்களுடைய கருத்து மட்டுமே மேலங்குவது போல தோன்றுகிறது. தெளிவுக்காக காத்திருந்தேன்.

ராமதாஸ் சொல்கிறபடி மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோருடன் இத்தனை ஆண்டுகளாக நான் கூட்டணியை பேசி முடித்தவன். பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னதால்தான் கூட்டணி பேசி முடித்தேன். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கச் சொன்னதாக அவர் பேசியது பொய். பாஜக எனக்கு மாமனா, மச்சானா. அவர்களுடன்தான் கூட்டணி வைப்பேன் என் சொல்வதற்கு. அதிமுக உடன் கூட்டணி பேச வேண்டும் என்று சொன்னால் நான் அப்போதே பேசி இருப்பேன். அவர்தான் பாஜகவுடன் பேச சொன்னார். எல்லாம் பேசி முடித்து கூட்டணி எல்லாம் நிறைவடைந்த பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எனக்கே தெரியாமல் நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com