‘பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது’ - வைகோ

Vaiko
வைகோ
Published on

‘பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் உள்ள பெகல்காமில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.

மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.

நீட் வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது. அமலாக்கத்துறை வருமான வரித்துறை, போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது. தி.மு.க.வில் யாரும் இதைப்பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com