ஆம்லெட் - மது
ஆம்லெட் - மது

‘பங்கு பங்காதான் இருக்கனும்…!’ஆம்லெட் பிரச்சனையில் ஏற்பட்ட உயிரிழப்பு!

குடி ஏற்படுத்தும் பாதிப்புகளை நிறையக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது, கொடூரமானது.

சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. புதுப்பட்டினம் உய்யாலி குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பனும் (30) முருகனும்(32) நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கார் ஷோரூம் ஒன்றின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது வாங்கி வந்திருந்த ஆம்லெட்டை செல்லப்பன் அதிகமாக சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த முருகன் செல்லப்பனை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த விறகு கட்டையால் செல்லப்பனின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த செல்லப்பன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டிருக்கிறார்.

தகவலறிந்ததும் கல்பாக்கம் காவல்துறை விரைந்து வந்து செல்லப்பனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அதே பகுதியில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் ஆம்லேட்டுக்காக உறவினரையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com