விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பட்டாசு தொழிற்சாலைகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றாலும், வெடிவிபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கு குறைந்தபாடில்லை. கடந்த ஜனவரி 10 பேரும், பிப்ரவரியில் 4 பேரும், ஏப்ரலில் 10 பேரும், மே மாதத்தில் 15 பேரும், ஜூன் மாதம் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.பட்டாசு ஆலையில், ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.