‘என் பின்னால் வாங்க... கல்வி, வேலை பெற்றுத் தருகிறேன்’ - அன்புமணி!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Published on

“உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நல்ல படிப்பையும் வேலைவாய்ப்பையும் நான் வாங்கித் தருகிறேன். என் பின்னால் வாருங்கள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பெருவிழா மாநாடு நேற்று மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைபெற்றது.

லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள், மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் படங்கள் வானில் ட்ரோன் ஷோ மூலமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.

தொடர்ந்து மாநாட்டில் பேசிய அன்புமணி,"என்னுடைய அண்ணன் காடுவெட்டி குரு இந்த மாநாட்டில் இல்லை என்று எனக்கு வருத்தம். இன்று மட்டும் காடுவெட்டி குரு இருந்திருந்தால் மற்றவர்கள் போல நானும் தம்பிகளோடு அமர்ந்து இருப்பேன். அவருடைய கனவு ஐயா காலத்தில் நாம் ஆள வேண்டும் என்பதுதான். திமுக பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக துரோகம் செய்கிறது.

திமுகவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம். 23 சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவிற்கு வன்னிய சமுதாயம் தான் கொடுத்துள்ளது. ஆனால் இந்த சமுதாயத்திற்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை. இது வன்னியர் சமுதாயத்திற்கு அல்ல தமிழ்நாட்டுக்கே செய்யும் துரோகம். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து சமுதாயங்களையும் முன்னேற்ற தமிழக அரசு சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும். எம்பிசியில் வழங்கப்படும் 20 சதவீதத்தில் வன்னியர்கள் 12 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது. ஆனால் அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளில் வன்னியர்களின் பங்கு மிக மிக சொற்பமாக உள்ளது.

தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய வன்னியர் சமுதாயம் மிக மிக பின்தங்கிய சமுதாயமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் முதலமைச்சருக்கு இதைப் பற்றிய எந்த கவலையும் கிடையாது. வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல இதே போல ஒடுக்கப்பட்ட வெடிப்பு நிலையில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாய மக்களையும் முன்னேற்றத்திற்கு கொண்டுவர தமிழக அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்போம் என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாமக நிறுவனர் ராமதாஸ் இதற்காக 45 ஆண்டு காலமாக போராடி வருகிறார். இந்தியாவின் பல பிரதமர்களை நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். இந்த அறிவிப்பு மருத்துவர் ராமதாஸுக்கு கிடைத்த வெற்றி. தமிழக முதலமைச்சரே இன்னும் எவ்வளவு காலமாக எங்களை கெஞ்ச வைப்பீர்கள்..?

எம்பிசியில் 115 சமுதாயங்கள் உள்ளது. அதில் 114 சமுதாயங்களின் சதவீதம் வெறும் 6.8சதவீதம். வன்னியர் சமுதாயம் மட்டும் 14.2 சதவீதம் உள்ளது. இவர்களில் யார் அதிகம் இட ஒதுக்கீட்டை எடுத்து செல்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். உங்கள் அண்ணன் என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நல்ல படிப்பையும் வேலைவாய்ப்பையும் நான் வாங்கித் தருகிறேன். நாம் ஆள வேண்டும் நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம் இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம். வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள். இந்த மண்ணை பாதுகாக்க நம் பாட்டன் பூட்டன் பாதுகாத்து இந்த மண்ணை காத்து வைத்தான். இந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் நாம்." என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com