வாழை இலை சாப்பாடு
வாழை இலை சாப்பாடு

முதல்ல கிச்சன்ல இருந்து வெளியே வாங்கய்யா!

மருத்துவர் சென்பாலன் தமிழர்களின் உணவு பழக்கம் எந்தளவுக்கு பெண்களை, பணத்தை, நேரத்தை சுரண்டுகிறது என்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று எழுதிருந்தார்.

அப்படியென்ன சென்பாலன் எழுதியிருக்கிறார், என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்...

“தமிழ்நாட்டு உணவுப் பழக்கவழக்க முறையின்படி சாப்பிட வேண்டுமானால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவர் தினசரி எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் அடுக்களையில் உழைத்து சமைக்க வேண்டும். அலுவலகத்திற்குச் சென்று எட்டு மணி நேரம் கடும் பணி செய்வதற்கு ஒப்பானது அது.

இவை இல்லாமல், காய்கறி மளிகை பொருட்கள் வாங்குவதற்கான நேரம் தனி. என்ன சமைக்கலாம் என யோசிப்பதில் வீணாகும் நேரம் தனி. மசாலா பொருட்கள், பொடி வகைகள் அரைப்பதற்கான நேரம் தனி.

சினிமா, டிவி, கிரிக்கெட் போன்றவற்றில் வீணடிக்கும் நேரத்தைவிட அதிக அளவு நேரத்தை சமையல் அறையில் வீணடிக்கின்றோம். அடுக்களைக்கான பொருளாதார முதலீடுகள், செலவுகள் வேறு டாபிக், அதைத் தனியாகவே எழுதலாம்.

அதிக வேலைப்பளு, முதலீடு, செலவு காரணமாகத்தான் இந்திய உணவகத்தின் விலைகளும் அதிகமாக உள்ளன. 2000 ரூபாய் இல்லாமல் குடும்பமாக டின்னர் செல்வதற்குப் பதில் வியாழக்கிழமை சாய்பாபா கோயில் வாசலில் உட்காரலாம். குறைந்த விலையில் பசியாற தரமான உணவு எங்குமே கிடைப்பது இல்லை.

சர்வைவலுக்கு தொடர்பே இல்லாத உணவு முறையில் தற்போது சிக்கியுள்ளோம்.

இந்த இழுவையான உணவு முறைக்கு ஆரோக்கியம், பாரம்பரியம், கலாச்சாரம், குடும்ப பிணைப்பு, பாசம், கடலை புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்ற ஜிமிக்கிகள் வேறு. சட்டி சட்டியாக சோற்றை உள்ளே தள்ளிக் கொண்டே பர்கர் எல்லாம் கெட்டது தெரியுமா என்று வகுப்பெடுக்கின்றனர்.

“மூனு வேளையும் நாங்க அப்பப்ப செஞ்சு தான் சாப்பிடுவோம்” எனும் பெருமைக்கும் குறைச்சல் இல்லை. சமைக்க மூன்று மணி நேரம், அதை பரிமாறி சாப்பிட முக்கால் மணி நேரம். வாரத்தில் ஒருநாள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பரவாயில்லை. எல்லா நாட்களிலும் மூன்று வேளையும் விருந்து போல் சாப்பாடு. காலையில் மல்லிகைப் பூ மாதிரி இட்லி, குறைந்தபட்சம் ரெண்டுவகை சட்னி. மதியம் சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் ரசம், தயிர், நேரம் இருந்தால் பாயசம். சுகர் இருப்ப்தால் இரவு ஒரு பனீர் பட்டர் மசாலா சப்பாத்தி. இது தவிர இரண்டு வேளை டீ, காபி. ஒருவேளை ஸ்னாக்ஸ். இத்தனை சமைத்த பாத்திரங்களையும் கழுவுவதற்குள் அடுத்தநாள் வந்துவிடுகிறது. இதில் 99% பாதிக்கப்படுவது பெண்களே. ஆனால் அதற்காகவே அவதரித்ததைப் போல ஆர்வமுடன் இயங்குவதைப் பார்த்தால் நமக்கெதுக்கு வம்பு எனத் தோன்றுகிறது.

வயதானாலும், உடல்நலம் இல்லாவிட்டாலும் கூட அதற்கு விடுமுறை இல்லை. அதிக உடல் உழைப்பு கோராத, எளிமையான உணவுமுறைகள் இளக்காரமாகப் பார்க்கப்படுகின்றன. ஏற்கனவே அப்படி இருந்தவற்றையும் புறக்கணித்துவிட்டோம். கம்யூனிட்டி கிச்சன் போன்ற வாய்ப்புகளும் அதிகமாக இல்லை. வீட்டில் மூன்று வேளையும் உணவு தயாராக இல்லாவிட்டால் சிலருக்கு கைநடுக்கமே வந்துவிடுகிறது. இன்னும் ரிவர்சில் போய் மசாலா பொடிகளும் வீட்டிலேயே அரைக்க வேண்டும் என்பது போல எண்ணங்கள் வரத் தொடங்கியுள்ளன. அதிக உணவு, உடல் பருமன் எனும் நிலைக்கு மொத்த சமூகமும் வந்துவிட்டது. இருந்தும் உணவின் மீதான ஆர்வம் மட்டும் குறையவில்லை. ஆரோக்கியம், பாரம்பரியம், பாசம் என்று காரணம் காட்டி நாக்கிற்கு பின்னால்தான் வரிசை கட்டி நிற்கிறோம். இந்த உண்மைக் காரணத்தை சொல்ல யாருக்கும் மனம் வரவில்லை.

இது ஒரு சுழல், மேலும் மேலும் மெருகேற்றுவதாக நினைத்துக் கொண்டு உள்ளிழுத்துக் கொண்டே செல்கிறது. சமூகத்தின் 50% workforce-ஐ நாக்குக்காக வீணடிக்கின்றோம்.

இந்நிலையில் புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள் இந்தியாவில் இருந்து வரவில்லையாம். எப்படி வரும்?

முதல்ல கிச்சன்ல இருந்து வெளில வாங்கய்யா…” என பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவை நிறைய ஆண்களும் பெண்களும் வரவேற்று கருத்து பதிவிட்டுள்ளனர்....

“அந்த ஒரு ஜான் வயித்துக்காக தானே சம்பாதிக்கறோம்னு டயலாக்க சொல்லிட்டு ஒன்றரை முழ நீளத்துக்கு மெனுவ அடுக்க வேண்டியது…”என அருணா ராஜ் பதிவிட்டுள்ளார்.

காயத்ரி என்பவர், “பளார் பளார். இங்க food plate போடறதே அந்த பெருமைய சொல்லிக்க தான்.” என அறைந்துள்ளார்.

ஆண்கள் தரப்பில் எழுத்தாளர் சுபகுணராஜன், “முற்றாக ஒப்புகிறேன். போராடிப் பார்த்தாலும் விட்டுப் போகாத ‘வெங்காயச்’ சோற்றுக் கலாச்சாரம். இது ஒரு வகையில் தரம்( ? ) உயர்த்திக் கொள்ளும் மேட்டிமைவாதப் பிணி. அழித்தொழிக்கப்பட வேண்டிய சோற்றுக் கலாச்சாரம்.” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

யூடியூப் சினிமா விமர்சகர் ஜாக்கி சேகர், ”காலையில் வச்ச குழம்பும் மதியானம் சாப்பிட மாட்டான் மத்தியானம் வச்ச குழம்ப நைட் நொட்ட மாட்டாராம்.... அவருக்கு வேலைக்கு புதுசு புதுசா வடிச்சு கொடுக்கணும்... அப்படி விதவிதமா சமைச்சு போட்டும் வாராவாரம் அடிச்சு தொம்சம் பண்ற புருஷனை எனக்கு தெரியும் இன்னைக்கும் அந்த அம்மா வேலா வேலைக்கு சமைச்சு போட்டுக்கிட்டே இருக்கு... எல்லாத்தையும் விட நைட்டானா அவருக்கு டிபன் .....னும்” என கண்டித்து பதிவிட்டுள்ளார்.

வாழை இலையை போட்டு வயிறு முட்ட சாப்பிடுகிறவர்கள் மட்டுமல்ல சுடச்சுட சோறு வேண்டும் என்று சொல்பவர்களும் கொஞ்சம் மனம் திருந்தலாம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com