காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (வயது 79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சத்யபால் மாலிக், இன்று பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தனிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த சத்யபால் மாலிக்?
1960களில் ராம் மனோகர் லோகியாவின் சோசலிச கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சத்யபால் மாலிக், மாணவர் சங்கத் தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
பாரதிய கிராந்தி தளம், காங்கிரஸ் மற்றும் வி.பி. சிங் தலைமையிலான ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் பணிபுரிந்துள்ளார். பின்னர், 2004 ஆம் ஆண்டில் பாஜகவின் இணைந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் சட்டப்பேரவை உறுப்பினராக 1974 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 1980, 1986 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்துள்ளார்.
பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் எழுந்த போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகிய சத்யபால் மாலிக், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
ஜனதா தளக் கட்சியில் இணைந்து 1989 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கட்சியில் இணைந்தார்.
2017 ஆம் ஆண்டு பிகார் ஆளுநராக பதவி வகித்தார். 2018 முதல் 2019 வரை ஜம்மு - காஷ்மீர் ஆளுநராக இவர் பதவி வகித்த காலத்தில்தான், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
பின்னர், 2022 வரை கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.