சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ என்ன சொல்கிறது?
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸூடன் கை குலுக்கி வரவேற்கிறார். பின்னர், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோருடன் உரையாடுகிறார். அங்கு பிரதமர் மோடியும் அமர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் பி.வி. உட்படப் பலரும் தங்களின் சமூக ஊடகங்களின் பகிர்ந்து, மேக்ரான், மோடியை புறக்கணித்ததாக பதிவிட்டிருந்தனர்.
மேலும், சில ரஷ்ய மொழி சமூக ஊடக கணக்குகளிலும், இதே வீடியோ பகிர்ந்து, மெக்ரான் மோடியை ‘திட்டமிட்டு புறக்கணித்தார்’ என்று பதிவிடப்பட்டிருந்தது.
என்ன நடந்தது?
மேக்ரான் மோடியைப் புறக்கணித்ததுபோல் தோன்றினாலும், உச்சிமாநாட்டினை கவனித்திருந்தால், உண்மை என்னவென்று தெரிந்திருக்கும்.
இந்த உச்சி மாநாட்டை அசோசியேட் ப்ரஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை இந்த வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோவின் 8:38ஆவது நிமிடத்தில் இருந்து பார்த்தால் மோடியுடன் மேக்ரான் மாநாட்டு அரங்கிற்குள் நுழைவதை பார்க்கலாம். உள்ளே வந்ததும் இவர்கள் மற்ற தலைவர்களுடன் உரையாடுவதையும் காணலாம்.
இதே வீடியோவில், சமூக ஊடகத்தில் வைரலான காட்சிகளையும் பார்க்கலாம். இதில் மோடி அமர்ந்திருப்பதையும் மேக்ரான் மற்ற தலைவர்களுடன் உரையாடுவதையும் பார்க்கலாம்.
இந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை மோடியும் மேக்ரானும் இணைந்து தலைமை தாங்கி நடத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியை மேடைக்கு அழைப்பதற்கு முன்னர் மேக்ரான்தான் முதலில் பேசினார். பின்னர், மோடி பேசுவதற்கு மேடை ஏறியபோது இருவரும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இந்த நேரடி ஒளிபரப்பின் மூலம், மோடியை மேக்ரான் புறக்கணிக்கவில்லை என்பது உறுதியாகிறது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்னர் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இருவரின் சமூக ஊடகத்திலும் பகிரப்பட்டுள்ளன.
மோடி பகிர்ந்திருந்த எக்ஸ் தள வீடியோவில், நிகழ்வின் காட்சிகளோடு மோடியும் மெக்ரானும் கை குலுக்குவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு பதிவில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார்.
மேக்ரான் சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோவில், மோடியை அவர் மாநாட்டிற்கு வாழ்த்தி வரவேற்பதைக் காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பாரிஸ் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை 'புறக்கணிக்கவில்லை' என்பது தெளிவாகிறது.
இந்த செய்திக்கட்டுரையை The Quint தளம் முதலில் வெளியிட்டது.
மூலச்செய்தி இணைப்பு : Did Macron Snub Modi During Paris AI Summit? Here’s What Happened
இதை Shakti Collective fact check (சக்தி கலெக்டிவ்) குழுவின் ஒரு பகுதியாக அந்திமழை ஊடகம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.