அரசு பள்ளி டூ ஐஐடி… நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி!

மாணவி யோகேஸ்வரி
மாணவி யோகேஸ்வரி
Published on

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜே.இ.இ. தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிக்கப்போகும் சாத்தூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகளான யோகேஸ்வரிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழக மாணவர்களுக்கு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தேசிய தேர்வான குடிமைப்பணிக்கான யுபிஎஸ்சி தேர்வில் இதுவரை இல்லாத அளவில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 தேர்வாகி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றது.

அதுபோல, பல்வேறு தேசிய தேர்வுகளை எதிர்கொள்ள நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.களில் படிப்பதற்கான நுழைவு தேர்வான ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி. ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று, மும்பை ஐ.ஐ.டி.யில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிப்பு படிக்க தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அவரது வெற்றியை பாராட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.5000 வழங்கி பாராட்டியுள்ளார்.

யோகேஸ்வரியின் தந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறது. அவரது அம்மா பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வருகிறார்.

தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யோகேஸ்வரி, தனது வெற்றிக்கு துணைபுரிந்த நான் முதல்வன் திட்டம், அதை கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இந்த திட்டம் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறியவர், அனைவரும் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து, அனைத்து மாநில மற்றும் தேசிய தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com