முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். .ரவி அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் இரு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றப்பத்திரிக்கை கிடைக்கப் பெற்ற உடனே, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இவரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.