சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என கடந்த மே 28ஆம் தேதியன்று நீதிமன்றம் அறிவித்தது.
தண்டனை விவரத்தை இன்று (ஜூன் 2) அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதில், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தி கூறியதாவது:, “இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அவரது செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் பின்னணியில் யாரும் இல்லை. எனவே, இனிமேலும் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.” என்று தெரிவித்தார்.