கோத்ரேஜ் ஆலை ஒப்பந்தம்
கோத்ரேஜ் ஆலை ஒப்பந்தம்

சென்னையை அடுத்து ரூ.515 கோடியில் கோத்ரெஜ் புதிய ஆலை - அரசுடன் ஒப்பந்தம்

கோத்ரேஜ் குழுமத்தின் சார்பில் சென்னையை அடுத்த மறைமலைநகர் பகுதியில் ரூ.515 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் அந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

உலக அளவில் பல்வேறு வணிகங்களை மேற்கொண்டுவரும் கோத்ரேஜ் குழுமம், 120 கோடி நுகர்வோரின்  ஆதரவைப் பெற்றுள்ளது. இக்குழுமத்தின் நிகர வருமானம் ஆண்டுக்கு ரூ.7667 கோடி ஆகும். இதன் ஒரு பிரிவான கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி மையங்களை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உற்பத்தி மையம் ஒன்றை ஏற்கெனவே நிறுவியுள்ளது. மேலும், ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை  நிறுவ இப்போது ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. 

புதிய ஆலையில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள், கொசு ஒழிப்பான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும். 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இது அமைக்கப்படும். குறிப்பாக, இதில் 50 சதவிகிதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஒப்பந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு -வர்த்தகத் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, தலைமைச் செயலாளர்                   சிவ்தாஸ் மீனா, துறையின் செயலாளர் ச.கிருஷ்ணன், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரேஜ், மேலாண்மை இயக்குநர் சுதிர் சீதாபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com