மாணவர்களை 'ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட வைத்த ஆளுநர் ரவி! – வலுக்கும் கண்டனம்!

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி
Published on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் சில நாள்கள் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்.

‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசும்போது, "கம்பராமாயணம் தமிழர்களின அடையாளம், தமிழ் இலக்கிய பண்பாட்டின் பிரதிபலிப்பு. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் காவியம். பெண்களை எப்படி கண்ணியமாக போற்றப்பட வேண்டும் என கம்பன் கூறியதை பார்த்தோம்.

சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவர் பெண்களை தரக்குறைவாக கீழ்த்தரமாகவும் விமர்சித்திருந்தார். அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. அப்படிப்பட்டவரை கனவான் என்று அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன்.

சிவன், விஷ்ணுவை வணங்குபவர்களின் நம்பிக்கையை, பக்தி உணர்வை காலில் போட்டு மிதித்திருக்கிறார். பல்லாயிரம் ஆண்டு ஆன்மிக மரபை சேதப்படுத்தியுள்ளனர். அமைச்சரின் ஆபாச பேச்சு மூலம் தமிழகத்தில் கலாசாரப் படுகொலைகள் நடந்து வருகின்றன.

அந்த அமைப்பினரால் நமது தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்கள் நடக்கிறது.

தற்போது புதிய அடையாளங்களை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. இதற்கு நம்மால் என்ன செய்ய முடியுமென இருக்கக் கூடாது. பல்லாண்டுகளுக்கு முன் நம் ஆலயங்களை அழிக்க முற்பட்டபோது நம் முன்னோர்கள் எதிர்த்து போராடினார்கள். இதை நாம் கற்றுக்கொண்டு பள்ளிகளிருந்தே தொடஙகி ஒரு இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்.

இதுவே நாம் கம்பனுக்கு செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும்" என்று பேசியவர், உரையை முடிக்கும்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர், மாணவர்களையும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைத்தார். ஆளுநர் ரவியின் இந்த செயலுக்கு திமுக, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com