‘விரும்பி வந்து உறவு வைத்துக் கொண்டார்...’ - மீண்டும் நடிகையை சீண்டிய சீமான்

செய்தியாளர் சந்திப்பில் சீமான்
செய்தியாளர் சந்திப்பில் சீமான்
Published on

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேற்று இரவு விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், நடிகை விஜயலட்சுமி விரும்பி வந்துத்தான் உறவு வைத்துக் கொண்டதாக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி அளித்த வழக்கில், நாம் தமிழ கட்சியின் சீமான் நேற்றிரவு 10 மணியளவில் சென்னை வளரசவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரனார்.

சீமான் வருகையை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் அத்துமீறினால் கைது செய்து அழைத்து செல்ல பேருந்துகளையும் தயாராக வைத்திருந்தனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் வளசரவாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சீமானிடம் கேட்பதற்காக சுமார் 100 கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீஸார் தயார் செய்து வைத்திருந்தனர். அதிலிருந்து ஒவ்வொரு கேள்வியாக கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜயலட்சுமிக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது, அவரை நீங்கள் மாலை மாற்றி திருமணம் செய்தது உண்மையா, கருக்கலைப்பு செய்தது உண்மையா, புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்தீர்களா, பண உதவி செய்தீர்களா என்பன உட்பட பல்வேறு கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு சீமான் அளித்த பதில்களை வாக்குமூலமாக போலீஸார் பதிவு செய்து கொண்டனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குள் சீமான் சென்றபோது, உடன் வந்திருந்த தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சீமானுடன் வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையில், சீமானுடன் வந்திருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி, காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸாருடன் வித்யா ராணி கண்ணீர் வடித்தபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , “போலீஸ் விசாரணையில் சென்றமுறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர, காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்னை நல்ல முறையில் நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்தபோது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.

என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும்தான் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும்போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்?

கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது.

புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?

அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com