படத்தை எடுத்து முடித்தார்களா அல்லது டைரக்டரின் கதையை முடித்தார்களா என்று கூட தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மர்ம தயாரிப்பாக இருந்த நயன்தாராவின் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 14 அன்று ரிலீஸாகவிருப்பதாக திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் என்று சொல்லப்படும் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’. இப்படத்தில் நயன்தாரா கதை நாயகியாகவும் அவருக்கு ஜோடியாக கவினும் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கிய ‘எல்.ஐ.கே’ படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் லலித் குமார் , நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் காம்போ தயாரிப்பு.
எல்.ஐ.கே தயாரிப்பின்போதே இவ்விரு தரப்பினரும் பல்வேறு பஞ்சாயத்துகள் நிமித்தம் கட்டி உருண்டதால் இந்த ‘ஹாய்’ படம் நோய்வாய்ப்பட்டு ஐ.சி.யு.வில் கிடந்தது. பின்னர் எப்போது சிகிச்சையளித்து நார்மல் வார்டுக்குக் கொண்டுவந்தார்களோ தெரியவில்லை. தற்போது ஜூலை 14 ரிலீஸ் என்று தெம்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீஸரில் கையில் அரிவாளோடு நயன் கவினுக்கு ‘ஹாய்’ சொல்கிறார்.
ஆனால் பட ரிலீஸ் தேதியைப் பார்த்தால் நயன் அரிவாளை நீட்டுவது சூர்யாவை எச்சரிக்கத்தான் என்கிறார்கள். ‘ஹாய்’ பட அறிவிப்பு வெளியிட்டுள்ள அதே ஜூலை 14ல்தான் சூர்யாவின் ‘விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்’ வெளியாகிறது. இந்த தேதியை சூர்யா அன்ட் டீம்ஸ் வெளியிட்டு இரு மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் அதே தேதியில் நயன் தன் படத்தை வெளியிடுவதை சூர்யா கொஞ்சமும் விரும்பவில்லையாம்.
ஆனால் பகை பகைதான். மோதிப்பாத்துடலாம் என்று அடம்பிடிக்கிறாராம் நயன்தாரா.