என்.எல்.சி. போராட்டம் - சமரசம் பேச உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

என்.எல்.சி. போராட்டம் - சமரசம் பேச உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக எழுந்த பிரச்னையில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.இராமசுப்பிரமனியனை பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாகமும் அரசுத் தரப்பும் தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் நிர்வாகம் வழக்கு தொடுத்தது. நீதிபதி எம்.தண்டபாணி இதை விசாரித்து வருகிறார். இதில் கடந்த முறை விசாரணையின்போது, தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தனி இடத்தை காவல்துறை அறிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும், தொழிலாளர்கள் தொடர்ந்து நுழைவாயில் அருகே போராட்டம் நடத்திவருவதாகவும் மற்ற ஊழியர்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுக்கும்வகையில் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் நிர்வாகத் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

குறுக்கிட்ட நீதிபதி, "இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கலாம்" எனக் கருதுவதாகக் கூறினார். ஆனால் நிர்வாகத் தரப்பில், "தொழில் தாவா சட்டத்தின்படி அதற்கென தனி அதிகாரி இருப்பதாகக் கூறினார்கள்.

அவர் பேச்சு நடத்தி எந்தப் பயனும் இல்லையே என நிராகரித்த நீதிபதி, என்.எல்.சி. நிர்வாகம் அமைதியை விரும்புகிறதா, பிரச்னையை விலை கொடுத்து வாங்க விரும்புகிறதா எனக் கேட்டார்.

சமரசப் பேச்சு நடத்த உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க உள்ளதாகவும், இதுகுறித்து இரு தரப்பினரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் போராட்டம் குறித்து கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வரும் 11ஆம் தேதி விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அறிக்கை அளிக்கத் தவறினால், மாவட்ட ஆட்சியரும் கண்காணிப்பாளரும் நேரில் வந்தாகவேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com