விகடன் இணையதளத்தின் மீதான முடக்கத்தை நீக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகளைத் திரும்ப அழைத்துவரும்போது அவர்களின் கைகால்கள் கட்டப்பட்டிருந்தன. அதற்கு மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஊடகங்களிலும் விமர்சனங்கள் வெளிவந்தன. விகடன் மின்னிதழில் டிரம்பின் முன்பாக பிரதமர் மோடி கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டதைப் போல கருத்துப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கும் பிரஸ் கவுன்சிலுக்கும் புகார் அளித்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி விகடன் இணையதளம் முடக்கப்பட்டது.
ஆனால் அதைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகாமல் குழப்பம் நிலவியது.
அதைத் தொடர்ந்து, மைய அரசின் மின்னணு, தகவல்நுட்பவியல் துறை சார்பில் விகடன் தளத்துக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு விகடன் சார்பில் விளக்கமும் தரப்பட்டது.
இதனிடையே, விகடன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பரதசக்கரவர்த்தி இவ்வழக்கை விசாரித்தார். விகடன் மீதான முடக்கத்தை நீக்கவேண்டும் என மைய அரசுக்கும் அந்த கருத்துப்படத்தை நீக்கவேண்டும் என விகடன் தரப்புக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.