கோ கோ: தடைகளைத் தாண்டி இந்திய அணி உலக சாம்பியன் ஆனது எப்படி?

கோ கோ இந்திய மகளிர் அணி
கோ கோ இந்திய மகளிர் அணி
Published on

பீஹாரின் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண் உலகச் சாம்பியன் ஆகி, தன் மீது இருந்த சமூகத் தடைகளை உடைத்துள்ளார். அதே போல் ராஜஸ்தானில் இருந்து ஆணாதிக்கத் தடைகளைத் தாண்டித்தான் இன்னொரு பெண்ணும் சாம்பியன் ஆக முடிந்துள்ளது. இது சமீபத்தில் நடந்து முடிந்த கோகோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியின் சாதனைகள்.

கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் ஆடவா் அணியும் மகளிா் அணியும் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளன. இதில் இந்திய மகளிா் அணி 78-40 எனவும், ஆடவா் அணி 54-36 எனவும் தங்களது பிரிவின் இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி வாகை சூடியுள்ளன.

கோ கோ விளையாட்டின் முதல் உலகக் கோப்பை போட்டி, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவா் பிரிவில் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த அணிகளும், மகளிா் பிரிவிலும் இந்தியா உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்றன.

மகளிர் பிரிவு: இப்பிரிவில் இந்தியா, ஈரான், உகாண்டா, கென்யா, நேபாளம், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்றில் வங்கதேசத்தை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்குள் நுழைந்தது. நேபாளம் தனது காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் உகாண்டாவையும் தோற்கடித்து, சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு வந்தது.

இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 78-40 என்ற கணக்கில் நேபாளத்தை வென்று வாகை சூடியது.

கோ கோ இந்திய ஆடவர் அணி
கோ கோ இந்திய ஆடவர் அணி

ஆடவர் பிரிவு: அதேபோல், ஆடவா் பிரிவில் இந்தியா, நேபாளம், ஈரான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, கென்யா அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. காலிறுதியில் இலங்கையை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் காலிறுதியில் வங்கதேசத்தையும், அரையிறுதியில் ஈரானையும் வென்று இறுதிக்கு வந்தது நேபாளம்.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19), விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 54-36 என நேபாளத்தை வீழ்த்தி அசத்தியது.

மொத்தமாக போட்டியில், ஆடவர் பிரிவில் 47 ஆட்டங்களும், மகளிா் பிரிவில் 43 ஆட்டங்களும் நடைபெற்றன. அதிகபட்சமாக ஆடவர் பிரிவில் நேபாளம் 524 புள்ளிகளும், மகளிர் பிரிவில் இந்தியா 628 புள்ளிகளும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com