பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹூசைனி காலமானார். அவருக்கு வயது 60.
கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர், ஓவியர், சமையல் கலைஞர் எனப் பன்முகத் திறன் கொண்டவர் ஹூசைனி. 1986ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்தவர்.
இந்த நிலையில், அவருக்கு இரத்தப் புற்றுநோய், அப்லாஸ்டிக் அனீமியா இருப்பது உறுதிசெய்யப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, தனது உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அகில இந்திய வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.