ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் அடையாளச் சின்னமான சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து, தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவராணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.