‘திமுகவை மட்டுமே நம்பி இல்லை’ – ஆதங்கத்தை வெளிப்படுத்திய திருமா!

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
Published on

‘திமுகவை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை’ என அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய முகநூல் நேரலையில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், ”திமுகவை மட்டுமே நம்பி கிடைக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த அவதூறுகளை கடந்து சொல்கிறோம் என்றாலும், கட்சியினர் அதில் தெளிவைப் பெறவேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவை வேண்டும் என்றாலும் எடுக்கலாம். எந்த எதிர்பார்ப்பும் நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவும் தொலைநோக்கு பார்வையும் வேண்டும். இதை புரிந்து கொள்ளாதவர்கள் நமக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்.

எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் படிகிற இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநல அரசியல். சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு தெளிவு வேண்டும். அதற்கு ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும். இது எல்லாம் புரிந்து கொள்ள முடியாத அற்பர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போன்று நமக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்ற அரசியல் கட்சிகள் போன்று இல்லாமல் முன்மாதிரியாக இயங்கக்கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் சொல்வதால் நமக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com