தவறு செய்தது அன்புமணி அல்ல. அவரை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
“நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் இந்த பதவி இறக்கம்? என அன்புமணி கேட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சியினரையும் திசை திருப்பும் முயற்சி.
தான் செய்த தவறுகளை மறைத்து, மக்களிடமும் கட்சியினரிடமும் அனுதாபம் தேட முயன்றிருக்கிறார். இருப்பினும் அதற்கு உண்டான பதிலையும் விளக்கத்தையும் அளிப்பது எனது கடமை.
இனிப்பை தவிர்த்து கசப்பான வார்த்தைகளைக் கொண்ட பதிலை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்தது அன்புமணி அல்ல. அவரை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன்.
என்ன தவறு செய்துவிட்டேன்? என கேள்வி கேட்டு, என்னை குற்றவாளியாக மக்கள் மத்தியிலும் கட்சியினரிடம் அடையாளம் காட்டி அனுதாபம் தேடுகிறார்.
வளர்த்த கிடாவே என் மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அழகான அளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்?
அன்புமணிதான் தவறான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். ஏதோ நான் போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரத்தோடு ஒளிவுமறைவு இன்றி சொல்கிறேன். பாண்டிச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது? ஒட்டுமொத்த நாடே பார்த்து அதிர்ந்தது.
மேடை நாகரீகமும், சபை நாகரீகம் எதையும் கடைப்பிடிக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்? முகுந்தனை இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டேன். உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? மேடை நாகரீகம் இல்லாமல், அனைவரது முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்தது சரியான செயலா? மைக்கை தூக்கிப் போட்டது சரியான செயலா? பனையூரில் அலுவலகம் திறந்துள்ளேன். அங்கு என்னை சந்திக்கலாம் என்று சொன்னது சரியான செயலா? தொடர்பு எண்ணைக் கொடுத்தது சரியான செயலா? நான்கு அறைக்குள் பேசித்தீர்க்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்? கட்சியை ஒரு நொடியில் உடைத்ததை உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அமைப்பைக் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அன்புமணி கலங்கப்படுத்திவிட்டார்.
தமிழ்குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி, நியமன கடிதத்தைக் கொடுத்தேன். அது வீட்டு வாசல்படியைக் கூட தாண்டவில்லை. அதை நிராகரித்தார் அன்புமணி. இதே செயலைத்தான் முகுந்தன் விவகாரத்திலும் அன்புமணி செய்தார்.
பொங்கல் சமயத்தில், முகுந்தன் விவகாரத்தை எல்லோரும் பேசினார்கள். அப்போது அம்மா (சரஸ்வதி) என்ன சொன்னார்கள் என்றால், உன்னுடைய இரண்டாவது மகளை நியமித்திருந்தால் சும்மா இருப்பீயா என கேட்டார்கள். உடனே, பாட்டிலைத் தூக்கி அம்மா மேல் அடித்தார். நல்லவேளை, அது அம்மா மீது படவில்லை. இது ஒரு உதாரணம்தான்.
கட்சியின் நிர்வாக குழுக்கூட்டத்தில் யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. அந்த கூட்டத்தில் நான் சொன்னேன். உனக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை என்று சொன்னேன். கேள்விகேட்ட ஒருவரையும் கடித்துக் குதறிவிட்டார். இதான் லட்சணம்.
கூசாமல் பொய் சொல்லக்கூடியவர் அன்புமணி. கட்சி ஆரம்பித்தபோதே சொன்னேன், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரமாட்டார்கள் என்று. எங்களுக்கு கிடைத்த முதல் அமைச்சர் பதவியைக் கூட தலித் எழில்மலைக்குத்தான் கொடுத்தோம். அதற்கு அடுத்து, அன்புமணி அமைச்சர் பதவி ஏற்க என் குடும்பத்தில் உள்ளவர்கள் வறுத்தெடுத்தார்கள். ஜி.கே. மணியும் வற்புறுத்தினார். எனக்கு விருப்பம் இல்லாமல், அவரை ஹெல்த் மினிஸ்டர் ஆகினேன். இந்த பதவியை ராம்விலாஸ் பாஸ்வானுக்குத்தான் கொடுத்திருந்தார்கள். அவரிடம் பேசி இந்த பதவியை அன்புமணிக்கு வாங்கிக் கொடுத்தேன்.
அப்பா, ஐயா என்று கூட சொல்ல வேண்டாம். நிறுவனர் கொடுத்த செயல் தலைவர் பதவியை ஏற்று, அவர் சொன்னதை செய்வேன் என்று சொல்லியிருக்கலாம். தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என கடிதம் எழுதிக் கொடுத்து, நீயே கூட்டணி குறித்துப் பேசு என்றேன். நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் சில இடங்கள் வென்றிருப்போம். அவர்களும் சில இடங்களில் வென்றிருப்பார்கள். ஆனால், அன்புமணியும் அவரது மனைவி செளமியாவும் எனது இரு கால்களையும் பிடித்துக் கொண்டு, பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றார்கள். பாஜகவுடன் கூட்டணி என்ற ஏற்பாட்டை சௌமியா செய்துவிட்டார். மறுநாள் காலையில் பார்த்தால் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷம். அண்ணாமலை உட்பட பாஜகவினர் வந்துவிட்டார்கள். இதெல்லாம் எனக்குத் தெரியாமலேயே நடக்கிறது. இப்படி சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன” என கண்கலங்கி கொண்டே பேசினார் ராமதாஸ்.