10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் என்னை உள்ளே அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினேன். அவர்கள் அனுமதிக்காததால் மீண்டும் திரும்பிவிட்டேன். விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன் என விபத்திலிருந்து தப்பிய பூமி சவுஹான் என்ற பெண் கூறியுள்ளார்.
நேற்று அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 உயிரிழந்தனர். ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார்.
அதேபோல் இன்னொரு பெண் லண்டனுக்குச் செல்லவிருந்த நிலையில் அந்த விமானத்தை தவறவிட்ட காரணத்தால் உயிர் பிழைத்துள்ளார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 171இல் ஏற வேண்டியிருந்த பூமி சவுஹான் என்ற பெண் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் தப்பினார்.
விபத்திலிருந்து தப்பிய பூமி சவுஹான், தான் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், கணபதியே தன்னைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகவும். அங்கே கணபதி ஊர்வலம் ஒன்று நடந்தது. அதனால் விமான நிலையத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அதன் காரணமாக விமானத்தை தவறவிட்டதாகவும் கூறினார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த லண்டனைச் சேர்ந்த பூமி சவுஹான், தனியாக இங்கிலாந்துக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தார். விபத்து நடந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன அவர், உடல் நடுங்குவதாகவும், என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், நடந்த சம்பவங்களை கேட்ட பிறகு தன்னுடைய மனம் வெறுமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.