‘நான் புலிகளிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றேன். அதற்கு ஓவியர் மருதுதான் சாட்சி’ என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்களின் கலைப் பணிகளை சிறப்பிக்கும் வகையில் மருதோவியம் என்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தன்னுடைய ஈழ பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று 2002ஆம் ஆண்டு ஈழத்துக்கு செல்கிற வாய்ப்பு கிடைத்தது. யாழ்பானத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வில் பங்கேற்பதற்காக நான், ஓவியர் மருது, மறைந்த எழுத்தாளர் செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஆகிய 5 பேரும் சென்றோம். அப்போதுதான் மருதுவிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் சென்றிருந்தோம். வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தோம். எங்களைக் கட்டித்தழுவி வரவேற்றார். எங்களோடு அமர்ந்து மதிய உணவு எடுத்துக் கொண்டார். எங்களுக்கு உணவும் பரிமாறினார்.
மறுநாள் அதிகாலை சூசயை சந்தித்தோம். அவர் எங்களை கடலுக்குள் அங்கயற்கண்ணி என்ற படகில் நீண்ட தூரம் அழைத்துச் சென்றார். படகிலிருந்த துப்பாக்கியை எப்படிக் கையாள வேண்டும் என சொல்லிக் கொடுத்தார்கள். அதைப் பார்த்தோம்; செய்தோம். நான் பொய் சொல்லவில்லை. அதற்கு அண்ணன் மருது அவர்கள்தான் சாட்சி.” என்றார்.