சம்பளத்தை உயர்த்தமாட்டேன் என நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சசிகுமார், “குட்டிப்புலி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களே நான் நடித்ததிலேயே அதிக வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி இவற்றைக் கடந்துவிட்டது. பலரும் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து என் சம்பளத்தை உயர்த்திவிடுவீர்களா? எனக் கேட்டார்கள். கண்டிப்பாக உயர்த்தமாட்டேன்.
ஏனென்றால், நான் தோல்வியடைந்திருக்கிறேன். டூரிஸ்ட் ஃபேமிலி முதல் நாளில் ரூ. 2 கோடி வரை வசூலித்திருக்கலாம். நான் நடித்த ஒரு படமே ரூ. 2 கோடிதான் வசூலித்திருக்கிறது. ஒரு நடிகரிடம் சரியாக எவ்வளவு வசூலிக்கிறது எனச் சொன்னால்தானே அவர்கள் தங்களின் சம்பளம் குறித்து சிந்திப்பார்கள்.
நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் பெருமை இயக்குநருக்குத்தான் சேரும்.
இந்தப் படத்தை எனக்குக் கொடுத்ததற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். கதை எழுதுவதற்கு வயது முக்கியம் இல்லை என்பதை அபிஷன் நிரூபித்து விட்டார்.
உனக்கு அடுத்த படம் எடுப்பதுதான் கடினமாக இருக்கும். அதையும் முதல் படமாக நினைத்து எடு. உன்னுடைய அடுத்த வெற்றிக்காக நான் காத்திருக்கிறேன். சரியான படத்தை மட்டும் எடுத்துவிடு அபி.” என்றார்.
தொடர்ந்து சிம்ரன் குறித்துப் பேசிய சசிகுமார், "உங்களுடைய படத்தை எல்லாம் நாங்கள் அவ்வளவு ரசித்துப் பார்த்திருக்கிறோம்.
சிம்ரன் மேமுடன் பணியாற்றியது சந்தோஷமான தருணமாக இருந்தது. 'வந்தது பெண்ணா வானவில் தானா?' என்று தியேட்டரில் பார்த்திருப்போம். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் அவர்களை அப்படி ரசித்துப் பார்த்திருப்போம்.
ஆனால் அவர் செட்டிற்கு வரும்போது எந்த ஒரு சீனியாரிட்டியும் காட்டவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து தமிழைக் கற்றுக்கொண்டு இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறார்.
அதனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று பேசியிருக்கிறார்