ரிகர்சல் பார்க்காமல் எந்தப் படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டேன் என்றும், கேமராவுக்கு முன்பாக நடிப்பதை விட ரிகர்சலின் போது நடிப்பதுதான் பிடிக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கமல்ஹாசனிடம், “இதுவரை 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டீர்கள். இப்போதும் ஒத்திகை பார்த்துவிட்டு தான் நடிக்கப் போவீர்களா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கமல்ஹாசன், “ரிகர்சல் பார்க்காமல் எந்தப் படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நடிப்பு பயிற்சியில்தான் இருப்பேன். கேமராவுக்கு முன்பான நடிப்பைவிட இதுவே எனக்கு பிடிக்கும். ஒத்திகை கண்டிப்பாகத் தேவை. சொல்லிக் கொடுக்கும்போதுதான் நாம் கற்றுக் கொள்ள முடியும். நான் ஒத்திகை செய்யாமலே நடித்துவிடுவேன் என யாராவது சொன்னால், அது தற்பெருமைகூட அல்ல; சில்லறைத்தனம்” எனத் தெரிவித்துள்ளார்.