‘வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது..!’ - தலைமை செயலர் எச்சரிக்கை

முருகானந்தம் ஐ.ஏ.எஸ்
முருகானந்தம் ஐ.ஏ.எஸ்
Published on

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அரசுத் துறைகளின் செயலர்கள், தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு அவர் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் கடந்த கால அறிவுறுத்தல்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வேலைநிறுத்தம் அல்லது வேலைநிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது போன்றவை அரசு அலுவலகங்களின் வழக்கமான செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறும் செயலாகும்.

அகில இந்திய அளவில் நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் அவர்கள் அன்றைய தினத்துக்கான ஊதியம் மற்றும் படிகளைப் பெறுவதற்குத் தகுதியில்லை. அதாவது, வேலை செய்யவில்லை, அதனால் ஊதியமில்லை என்ற நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பகுதிநேரம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டால் அவர்களை பணியிலிருந்து விடுவிக்கலாம்.

நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தின்போது யாருக்கும் தற்செயல் விடுப்போ அல்லது இதர விடுப்போ வழங்கக் கூடாது. மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.” என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com